Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

11 October 2011

தொடாந்து ஏறும் பெட்ரோல் விலை தாக்கு பிடிப்பாரா மிஸ்டர் பொதுஜனம்?

கடந்த வாரம் பொதுமக்கள் தலையில் மத்திய அரசு அடுத்தடுத்து, நறுக்...நறுக்கென 2 கொட்டுகள் கொட்டி விட்டது. ஒன்று மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. மற்றொன்று வழக்கம் போல் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டக் கணக்கை காரணம் காட்டி பெட்ரோல் விலை உயர்த்தியது.ஏற்கெனவே பற்றாக்குறை பட்ஜெட்டில் காலத்தை நகர்த்தி வரும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்து நஷ்டப்படாமல் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு அரசு மானியம் கொடுப்பதால் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வினியோகம்
செய்யப்படுகிறது.

அதிகரிப்பு ஏன்?
பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் அரசின் நிதி சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவதாக ஆட்சியாளர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. இந்த தடவை சற்று வித்தியாசமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் நிதி சுமையை சமாளிக்க வேறு வழியின்றி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஸி3 உயர்த்தியதாக அரசு அறிவித்துள்ளது.


நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் ஏழை வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களின் அன்றாட குடும்ப வாழ்க்கையே பற்றாக்குறை பட்ஜெட்டில்தான் நகர்கிறது. வளரும் அறிவியலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓரளவு தாக்குப்பிடித்து சமையல் காஸ் சிலிண்டர், டி.வி. இரு சக்கர வாகனம் போன்ற சிறு சிறு வசதிகளை மட்டுமே வாழ்க்கையில் அனுபவித்து வருகின்றனர்.

கட்டுப்படுத்த முடியுமா?
2030ம் ஆண்டில் உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவையில் 45 சதவீதம் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் தேவையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டில் இந்த காலகட்டத்தில் இந்த இரு நாடுகளிலும் இரு மடங்கு அதிகரித்து இருக்கும். கடந்த ஆண்டில் உலக அளவில் கச்சா எண்ணெய் தேவை, நாள் ஒன்றுக்கு 1,70,000 பேரலில் இருந்து 8 கோடியே 65 லட்சம் பேரலாக அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியால் வளரும் நாடுகளின் தேவை அதிகரித்து உள்ளதே இதற்கு காரணம்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பேரல் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளில் அமெரிக்காவின் தேவைதான் அதிகம். நாள் ஒன்றுக்கு 1,86,90,000 பேரல் தேவை. இதற்கு அடுத்தபடியாக சீனாவின் தேவை உள்ளது. நாள் ஒன்றுக்கு 82 லட்சம் பேரல் தேவை என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (ஐஇஏ) தெரிவித்துள்ளது.

இந்தியா தனது தேவையில் 75 சதவீதம் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் ஒரு பேரல் 24 முதல் 36 டாலர் வரை விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு பேரல் 113 டாலராக அதிகரித்துள்ளது.

தீர்வுக்கு என்ன வழி?
பெட்ரோல், டீசலில் எத்தனால் கலந்தால், வாகனப் புகையில் ஏற்படும் நச்சுத்தன்மை 50 சதவீதம் குறைந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இது சிறந்த எரிபொருளாக கருதப்படுகிறது. எத்தனால் என்பது நீர் நீக்கப்பட்ட ஆல்கஹால். இதை பயன்படுத்துவதால் மனிதருக்கோ சுற்றுச்சூழலுக்கோ பெரும் பாதிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இந்தியாவில் தற்போது சுமார் 500 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 300 ஆல்கஹால் உற்பத்தி நிலையங்களில் சுமார் 2.20 லட்சம் டன் ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை அதிகரிக்கலாம். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 25 சதவீதம் அளவுக்கு குறைக்கலாம்.


8 லிருந்து 70 வரை...
இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 22 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக லிட்டருக்கு 62 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஸி8.50 ஆக இருந்தது. டீசல் லிட்டர் ஸி3.50 ஆக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் (1994 பிப்ரவரியில்) பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்காக முறையே 16.78, 6.98 ஆக அதிகரித்தது. இதன் பிறகு படிபடியாக உயர்ந்து 2005ம் ஆண்டில் பெட்ரோல் விலை 43.49 ஆகவும் டீசல் ஸி30.45 ஆகவும் விற்பனையானது. 2010ம் ஆண்டில் பெட்ரோல் விலை ஸி53 ஆக அதிகரித்தது. ஓராண்டில் 13 ரூபாய் அதிகரித்து கடந்த 16ம் தேதி லிட்டர் ஸி70.63 ஆக உயர்ந்தது.

நோய்கள் வருவது எதனால்?
வாகனங்களின் பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் பெட்ரோல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வாகனப் புகையில் உள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, புகையில் உள்ள கரையாத பொருள் எஸ்பிஎம் 10, கார்பன் மோனாக்ஸைடு, ஓசோன், லெட், பென்சீன் போன்றவை ஆஸ்துமா, புற்றுநோய், நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...