சென்னை: "உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பற்றி தேர்தல் முடிவுகளுக்குப் பின் தான் தெரியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் திருமண விழாவில் கருணாநிதி பேசியதாவது: நாடு போகிற போக்கை பார்த்தால், நம் கலை, கலாசாரம், நாகரிகம் இவைகளுக்கு எதிர்காலம் உண்டா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம் பெரியவர்கள் கொண்டாடிய தமிழ் ஆண்டை, இன்று மாற்றியுள்ளனர். தை முதல் நாளை மீண்டும் ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டு வருவோம். அதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு கருணாநிதி பேசினார்.திருமணத்தை முடித்து வைத்த பின், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
நாள்தோறும் ஆட்களை குறி வைத்து கைது செய்கின்றனரே?
ஏற்கனவே இருந்த நெருக்கடி கால நிகழ்ச்சிகள் இப்போது மீண்டும் தொடர்கின்றன.
உள்ளாட்சித் தேர்தல் வருகிற நேரத்தில் உங்கள் கட்சியின் வெற்றியை இது பாதிக்காதா?
திட்டமிட்டு இப்படி செய்கின்றனர். இது பாதிக்காதா, இல்லையா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தான் தெரியும்.
5ம் தேதி முதல், சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே இரண்டு முறை கேட்டும், ஒரே பகுதியில் உங்கள் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் அமர இடம் தரவில்லை. இப்போது உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?
உங்களை போன்றவர்கள் என்ன கருத்துக்களை சொல்கிறார்களோ அதன்படி இருக்கும்.
சட்டசபையில், மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழக மக்களிடையே எழுந்த எழுச்சிக்கு பின், தீர்மானம் நிறைவேற்றுகிற அளவுக்கு முன் வந்ததற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால், அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கியம்.
மத்திய சட்ட அமைச்சர், சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என சொல்லியிருக்கிறாரே?
சட்ட அமைச்சர் என்ன சொன்னார் என்பது பற்றி, சட்ட நிபுணர்களோடு கலந்து பேசி தான் பதில் சொல்ல முடியும்.
No comments:
Post a Comment