புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை வரம்பு, மேலும் விரிவடைகிறது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அப்போது நிதி அமைச்சராக இருந்த, ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சி.பி.ஐ., நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், சி.பி.ஐ., சார்பில் ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என, சி.பி.ஐ., சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், வழக்கின் விசாரணை நிலை அறிக்கை, சி.பி.ஐ., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பாக, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, விசாரணை அறிக்கை விவரங்களை படித்தார்.அவர் கூறியதாவது: தே.ஜ., கூட்டணி ஆட்சியின்போது அருண்ஷோரி, பிரமோத் மகாஜன் ஆகியோர் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தனர். இவர்களது பதவிக் காலங்களில், ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டதாக தெரிகிறது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது, நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். "யுனிபைடு லைசென்சிங்' வழங்குவதற்கான மத்திய அமைச்சரவை குழுவின் தலைவராக, அப்போது ஜஸ்வந்த் சிங் தான், இருந்தார். மறைந்த பிரமோத் மகாஜன், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய மொபைல் போன் ஆபரேட்டர் சங்கத்தின் உறுப்பினர்கள், அப்போது, தொலைத் தொடர்புத் துறை செயலராக இருந்த ஷ்யாமல் கோசை சந்தித்து, மொபைல் போன் சேவை விதிமுறைகள் தொடர்பாக பேச்சு நடத்தினர். இது தொடர்பான விசாரணை, இம்மாத இறுதிக்குள் முடியும். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
சி.பி.ஐ., வழக்கறிஞரின் வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள்," இந்த வழக்கு தொடர்பாக, 2001-07ம் ஆண்டுகளில் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த அருண்÷ஷாரி மற்றும் தயாநிதியிடம் விசாரணை நடத்தப் போகிறீர்களா? உங்கள் விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என, கேள்வி எழுப்பினர். "ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மேக்சிஸ் நிறுவனத்திற்கும், அமைச்சர் தயாநிதிக்கும் இருந்த தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம். இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம்' என, வேணுகோபால் கூறினார்.
விசாரணைக்கு பா.ஜ., தயார்: சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கை குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டி: தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது, விசாரணை நடத்தப்படுவது குறித்து எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 1998ல் இருந்தே, விசாரணை நடத்த வேண்டும் என, பார்லிமென்டிலேயே நாங்கள் தெரிவித்துள்ளோம். இருந்தபோதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, பிரதமர் அலுவலக அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவர்களை குற்றம்சாட்டுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் சி.பி.ஐ.,யின் பாரபட்சமும், இரண்டு விதமான அணுகுமுறையும், எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும்...
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வரும்ம்ம்ம் ஆனா ........ வராது
ReplyDelete