புதுடில்லி: காங்கிரஸ் அல்லாத மாநிலத்தில் இடைஞ்சல் செய்வதே வழக்கமான வாடிக்கையான விஷயம் தான். இதில் பா.ஜ., ஆளும் குஜராத் மாநிலம் என்ன விதிவிலக்கா என்று கேட்க கூடிய அளவிற்கு கவர்னர் கமலா பெனிவால், முதல்வர் மோடியுடன் மோதல் நடவடிக்கையை துவக்கியிருக்கிறார்.கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவுடன் பரத்வாஜ் நடந்து கொண்டது போல் இம்மாநில கவர்னர் தனது இஷ்டப்படி லோக் அயுக்தாவின் தலைவரை நியமித்துள்ளார். இது மாநில அரசை புறம்தள்ளி விட்டு அடிப்படை கொள்கை மீறல் என பா.ஜ., தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை பார்லி.,யில் எம்.பி.,க்கள் எழுப்பியதால் பெரும் கூச்சல் நிலவியது. இதனையடுத்து பார்.,லி ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்அயுக்தா நியமனத்தில் கவர்னர் முடிவு : இம்மாநிலத்தில் கடந்த 2003 ல் லோக் அயுக்தா தலைவராக இருந்த எஸ்.எம்., சோனி ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கவர்னர் கமலா தன்னிச்சையாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ஏ., மேத்தா என்பவரை நியமித்துள்ளார். அதாவது மாநில அரசு - கவர்னர் இடையில் ஒரு கருத்தொற்றுமை இல்லாத நேரத்தில் இது போன்ற பிரச்னைகள் எழும் அதன் அடிப்படையில் கவர்னர் மாநில அரசை கலந்து ஆலோசிக்கவில்லை என முதல்வர் மோடி குற்றம் சாட்டுகிறார்.
மேலும் சமீபத்தில் லோக்அயுக்தா நியமனம் 3 அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவின் மூலம் தேர்வு செய்யப்படலாம் என முதல்வரின் பரிந்துரையை கவர்னர் புறந்தள்ளி விட்டார். எந்த ஒரு மாநிலம் ஆனாலும் அமைச்சரவை பரிந்துரையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும் ஆனால் கமலா அரசிலமைப்பு சட்டத்தின் 163 பிரிவை மதிக்காமல் நடந்து கொள்கிறார். இதன் மூலம் கவர்னர் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று பா.ஜ., குற்றம்சாட்டுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று மதியம் 1 மணியளவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டலை சந்தித்து, கவர்னரின் அடிப்படை கொள்கை மீறலை விளக்கினார். மேலும் கவர்னர் கமலாவை மாநிலத்தில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தும் மகஜர் ஒன்றையும் அத்வானி வழங்கினார்.
No comments:
Post a Comment