Sponcer
Today's Quotes:
29 August 2011
இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரசு என்றைக்குமே பாதுகாப்பு அரணாக விளங்கும்: ஜெயலலிதா
சென்னை, ஆக. 27-
இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரசு என்றைக்குமே பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. சார்பில் இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இப்தார் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற இப்தார் நோன்பு விருந்தளிக்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விருந்து அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எனது அழைப்பை ஏற்று இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. கடந்த ஆண்டு இதைப்போலவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை அ.தி.மு.க. சார்பில் நடத்தினேன். அப்போது, தேர்தல் வருகிறது, எனவே இஸ்லாமிய பெருமக்களின் வாக்கைப் பெறுவதற்காக இதை நடத்துகிறார் என்று தி.மு.க. தலைவர் அன்றைக்கு சொன்னார். அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
1999-ம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. சார்பில் ரமலான் புனித மாதத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுபோலவே இந்த ஆண்டும் இந்த இனிய நிகழ்ச்சியை கட்சி சார்பில் நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், பெரு மகிழ்ச்சி அடைகிறோம். புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரின் நோன்பு வெற்றி பெற வேண்டும் என்ற எனது பேரவாவை தெரிவிக்கிறேன். அ.தி.மு.க. அரசு என்றைக்குமே இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்ற உத்தரவாதத்தை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.
நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரது வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் விளங்கட்டும், அவர்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். அடுத்த ஆண்டு இதைப் போலவே மீண்டும் ரமலான் புனித மாதம் வருகிறபோது, நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹமத்ஜான் வரவேற்புரை ஆற்றினார். பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட திருமண உதவி திட்டங்களால் ஏழை இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வக்பு வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு தரப்படும் ஓய்வூதிய நிதியை ரூ.45 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக அம்மா உயர்த்தியுள்ளார் என்றும், வக்பு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் பேசினார். முடிவில் அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தலைமை ஹாஜி முகமது சலாபுதீன் அய்னிப், தலைமை ஹாஜி (ஜியா பிரிவு) குலாம் முகமது மெஹடியான், ஆற்காடு இளவரசர் முகமது அலி, நீதியரசர் அப்துல் வஹாப், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாகிருல்லா, அண்ணாசாலை தர்கா டிரஸ்டி சையத் மொய்னுதீன், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் `பிரசிடென்ட்' அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ஏ. சரத்குமார், இந்திய குடியரசு கட்சி தலைவர் எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன், புதிய தமிழகம் தலைவர் எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அரசு வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, மாவட்ட தலைவர் வீரைகறீம், இணை செயலாளர் இஸ்மாயில் கனி, மீனவர் பிரிவு துணைச் செயலாளர் டி.ரமேஷ், பூங்காநகர் செல்வம், முகப்பேர் இளஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment